என் பார்வையில் Sterlite copper தூத்துக்குடி

ஆதி அந்தம் என்று முடிவில்லா தமிழில் முதல் வணக்கம்.
நான் கடந்த இரண்டு வருடங்களாக தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைப் பார்த்து வருகிறேன்.
ஸ்டர்லைட் நிறுவனம் பற்றி பலர் அறிந்து இருப்பீர்கள். இந்த நிறுவனம் தூத்துக்குடிக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா என்று என் சிந்தையில் நினைத்ததை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியுள்ளேன்.

மூன்று வித பார்வைகளுடன் இதை எழுதுகிறேன்.
1) இயந்திரவியல் பொறியாளனாக
2) தூத்துக்குடியில் வேலை செய்து அதன் பொருளாதாரத்திற்கு பங்களிப்பவனாக
3) தூத்துக்குடி மண்ணின் உப்பை சாப்பிட்ட தூத்துக்குடிகாரனாக

முன்னதாக ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தைப் பற்றி இணையத்தில் உள்ள தகவல்களை கீழே இணைத்துள்ளேன்.

https://www.sterlitecopper.com

https://en.m.wikipedia.org/wiki/Sterlite_Copper

https://en.m.wikipedia.org/wiki/Thoothukudi_massacre

https://www.brighthubengineering.com/manufacturing-technology/68414-smelting-copper-from-ore/

https://m.economictimes.com/news/politics-and-nation/whats-wrong-with-vedantas-sterlite-unit-in-tuticorin-6-things-you-should-know/articleshow/64273066.cms

1) பொறியாளனாக:
       ஒரு தொழில் நிறுவனத்தில் முதலாளி முதல் தொழிலாளி வரை அனைவரும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள். ஸ்டெர்லைட் காப்பர் உருவாக்கும் செம்பு இந்தியாவின் 35 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. ஒரு வருடத்தில் 4 லட்சம் டன் செம்பு உற்பத்தி செய்கிறது.
      இந்த செம்பு உலோகத்தின் மூல பொருட்களைப் பல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கு இருந்தே உழைப்பும் தொழிலும் ஆரம்பிக்கிறது. இந்த மூலபொருளை தொழிற்சாலைக்கு எடுத்துச் சென்று உருக்கி பல உருவங்களில் (Blocks & wires) வடிக்கப்படுகிறது.
      மேலும் இதே நிறுவனத்தில் உபரியாக Sulphuric acid & it's gas, Phosphoric acid & Selenium தயாரிக்கப்படுகிறது. இத்தனை முதலீடு வருமானம் தொழிலும் வளர்ச்சியும் தொழிலாளர்களும் உள்ள நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
       முக்கியமாக நிலத்தடி நீரை மாசுப்படுத்துதல் மற்றும் கழிவு புகையை வெளியேற்றும் Chimney-ன் உயரம் குறைவாக இருப்பது என்பதே ஆகும். இந்த இரண்டு பிரச்சினையையும் ஒரு பொறியாளனாக தகுந்த அறிவியலுடன் போதிய நிதி உதவியுடன் தீர்வும் முடிவும் காணலாம்.
        Chimney-ன் உயரத்தை அதிகரிப்பது எளிதான வேலை. சில மாதம் அவகாசமும் தக்க அனுமதிகளும் வேண்டும். நிலத்தடி நீரை மாசுப்படுத்துதலைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதற்கு ஏற்றாற்போல் Cooling tower, Waste treatment plant போன்ற தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்.
ஆகவே ஒரு பொறியாளனாக தேவையான தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி இந்த ஆலையை மூடாமல் செய்ய வேண்டும்.

2) தூத்துக்குடியில் வேலை செய்து அதன் பொருளாதாரத்திற்கு பங்களிப்பவனாக:
          தூத்துக்குடியின் முக்கிய தொழில் மீன் பிடித்தல், கப்பல், வல்லம், உப்பளம் ஆகியவையே. பெரும்பாலான இளைஞர்கள் இளைஞிகள் வாலிபர்கள் இங்குள்ள Sterlite, SPIC, TAC, HWP, DCW, Nila sea foods, NTPL, TTPS, VOC port, SIPCOT ஆகிய நிறுவனங்களில் நிரந்தமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.
வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணிபுரிவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இவர்கள் அனைவரும் தூத்துக்குடியின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றனர். இத்தனை பெரிய Workforce-ஐ பெரு முதலாளிகள் லாபநோக்கத்துடன் பயன்படுத்துவதால் இங்கே தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியம் குறைவாக உள்ளது. இப்படி இல்லையெனில் பார்க்கும் வேலை உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது.
      இத்தனை பெரிய நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதன் மூலம் இங்குள்ள பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் இந்த நிறுவன தொழிலாளர்களின் குடும்ப நிலையும் இந்த நிறுவனத்தைச் சார்ந்த சிறு தொழில்களுக்கும் கேடு வரும்.
மேலாக செம்பு உற்பத்தி தடைபடுவதால் செம்பு உலோகத்தின் விலை எகிறும். அது மற்ற பொருட்களின் விலையில் விழும்.
இவற்றைக் கருத்தில் கொண்டால் ஸ்டர்லைட் நிறுவனத்தை மூடுவது சரியாகாது.

3) தூத்துக்குடி மண்ணின் உப்பை சாப்பிட்ட தூத்துக்குடிகாரனாக:
          என்று இங்கே ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடங்கலாம் என்று எண்ணம் வந்ததோ அன்றே அதனுடன் அரசியல் கலந்துவிட்டது. இன்று நாம் கேட்கும் செய்திகளில் சில "அந்த கட்சி இவ்வளவு வாங்கியுள்ளது, இந்த கட்சிக்கு நிறுவனம் தேர்தலுக்கு இவ்வளவு கொடுத்துள்ளது" போன்ற செய்திகளே ஆகும்.
           பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, மதிமுக, நாதக போன்ற கட்சிகள் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் ஸ்டெர்லைட் நிறுவனம் வேண்டாம் என்றே பேசியது.
           இவற்றை எல்லாம் தாண்டி, ஸ்டெர்லைட் நிறுவனம் இந்த மண்ணையும் மண்ணின் வளத்தையும் நிலத்தடி நீரையும் மாசுப்படுத்தியுள்ளது, சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. சாதாரண இருமலில் ஆரம்பித்து புற்றுநோய் வரை பலர் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். என்னுடன் பணியாற்றுபவர் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சிறிது காலம் வேலை பார்த்து உள்ளார். அவருக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்ததால் அந்த வேலையை விட்டு வந்துள்ளார். செம்பு காய்ச்சும் போது அதில் இருந்து வரும் புகை மிகவும் ஆபத்தாய் அமைகிறது. தூத்துக்குடி மக்கள் பலருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைக் காணலாம்.
           நமக்கு அடுத்த தலைமுறைக்கு நாம் தான் ஒரு நல்ல இருப்பிடம் அமைத்து தர வேண்டும். இந்த தலைமுறை மக்களையே போராட்டம் செய்ததாக சொல்லி சுட்டு குவித்த அரசாங்கத்தால் என்ன செய்தாலும் இறந்தவர்களையும் உடல் ஊனமுற்றோர்களையும் திரும்பி கொண்டு வருவோ முழுமையாக குணப்படுத்தவோ முடியாது. மக்களின் உணர்வுகளை அரசாங்கம் அவமதித்து விட்டது. பணம், பொருள், வேலை போனால் பிரச்சினை இல்லை. உயிர் போனால் மிக பெரிய பிரச்சினை. இறந்தவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு ஸ்டெர்லைட் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

            இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இன்றைய மக்களின் எதிர்ப்பினாலும் அடுத்த தலைமுறையின் நலனுக்காகவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும். திறக்க கூடாது.

இறுதி தீர்ப்பு: ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடிக்கு அவசியமற்றது.

நன்றி,
உங்கள் அன்பன் மற்றும் நண்பன்
விக்னேஸ்வரன் மு.

Comments

Popular posts from this blog

அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்

தமிழாற்றுப்"படை"

எதிர்நீச்சல் அடி!