இந்தி நமக்கு தேவையா?

அறிவார்ந்த தமிழ் சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள்,
கடந்த 14/09/19 அன்று இந்திய உள்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தான "இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரே மொழியான இந்தி மொழி அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கூற்றானது இன்று நேற்று அல்ல இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் இருந்தே இருந்து வருகிறது.
நாட்டு மக்களில் பெரும்பாலோர் இந்தி மொழி பேசுகின்றனர் என்பதால் அனைவரும் இந்தி பேச வேண்டும் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயலாகும்.
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை தான் அதன் ஆணிவேர். நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பல்வேறு மொழி, இன, பண்பாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பதே நம் மக்களின் சிறப்பம்சம்.
கண்ணை மூடிக்கொண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் என்பது அறிவிலித்தனம்.
இந்திய ஒன்றியம் குடியரசு பெற்றபின் தேசிய மொழியை தேர்ந்தெடுப்பதில் பிரச்சினை எழுந்தது. தெற்கில் இருந்து சீறிப்பாய்ந்த பேரறிஞர் அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள் பண்டிதர் ஜவஹர்லால் நேருவையே சிந்திக்க வைத்தது.
அதன் பின்னர் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் 15 ஆண்டுகள் இருக்கும் என்று முடிவு எய்தப்பட்டது.
ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழியாக ஆக்கப்பட்ட பின்னர் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இந்திய மொழிகளில் 22 மொழிகளை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சில மொழிகளை அங்கீகரிக்க வேண்டும் என்கின்ற நிலையில் இப்படி ஒரே மொழி என்பது சர்வாதிகார போக்காகும்.
1965 ஆம் ஆண்டு கிளர்ந்த மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வரலாறு அறிந்ததே!
தாய்மொழி தமிழுக்காக தன்னுயிர் நீத்த தாளமுத்து நடராசன் ஆகியோரை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏன் வேண்டும் இந்தி என்று கேட்டால் பலர் என்ன கூறுவர் என்றால் வேறு ஊருக்கு செல்லும்போது மொழி பிரச்சினை, இந்தியன் என்றால் இந்தி தெரியாமலா என்று பிதற்று வாதம் பேசுவர்.
எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க கூடாது. ஆதிக்க சக்திகளின் இந்த நயவஞ்சக போக்கு மக்களின் கிளர்ச்சி முன் மண்டியிடும்.
அதிலும் சிலரின் கூற்று, அந்நிய நாட்டின் ஆங்கில மொழியை படிப்பீர். ஆனால் இந்திய மொழிகளில் ஒன்றான இந்தியை எதிர்ப்பீர். என்ன நியாயம் இது?
இப்படி பேசுபவர்கள் ஆங்கில எதிர்ப்பு மட்டும் பேசவில்லை, கூடவே அறிவியல் எதிர்ப்பும் பேசுகின்றனர்.
தாங்கள் இந்த கட்டுரையை படிக்கும் இடத்தை சுற்றிப் பாருங்கள். எத்தனை எத்தனை பொருட்கள், சாதனங்கள், உபகரணங்கள் இருக்கின்றன? அவற்றை கண்டுபிடித்தது யார்? அவற்றின் அறிவியல் எந்த மொழியில் இருக்கின்றன? என்பது மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
நாட்டின் ஒற்றுமை என்ற பெயரில் இந்தி மொழியை ஏற்றால் இந்தி மொழி பேசாத மாநிலத்து மக்கள் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுவோம் என்பதே உண்மை. பல்வேறு அரசு தேர்வுகளில் ஏற்கனவே இந்தியும் ஆங்கிலமும் தான் தேர்வு மொழியாக உள்ளது. நாளை நாமும் இந்தி படித்து பரீட்சைக்கு போனால் ஏற்கனவே இந்தி தெரிந்த மக்களுக்கும் இப்போது இந்தி படித்த மக்களுக்கும் சமமற்ற போட்டி தான் உருவாகும். இவற்றிற்கு தீர்வு இருவருக்கும் பொது மொழியான ஆங்கிலமே.
மேலும் முதலாளித்துவ கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், ஒரே மொழி கொண்டோரிடம் ஒரு பொருளை எளிதாக விற்பனை செய்ய முடியும்.
அவர்களைக் கொண்டு ஒரு மாபெரும் பொருளாதார சந்தையை உருவாக்க முடியும்.
உதாரணமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையில் 1,2,3 என்று இருக்கிறது. முறையே ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் காணொளியை காணலாம். இந்தியை ஏற்றப் பின்னர், தமிழ் அலைவரிசை மட்டும் தனியே எதற்கு என்று ஒரு அலைவரிசை முடிவுக்கு வரும். அடுத்து அந்நிய மொழி வேண்டாம், இந்தி மட்டும் போதும் என்ற நிலை வரும்.
அதுவும் முடிவுக்கு வந்து சமஸ்கிருதம் என்று புதிதாய் ஒரு நிலை உருவாகும்.
அடுத்த கூற்று இந்தி வந்தால் தமிழ் அழியும் என்கிறீர்களே? ஆங்கிலம் வந்ததால் மட்டும் என்ன வளர்ந்துவிட்டதா?
ஆங்கிலத்தின் மூலம் நாம் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும், மொழி ரீதியாக நாம் சற்றே சறுக்கல் அடைந்துள்ளோம் என்பதே உண்மை.
அதற்கான சிறந்த உதாரணம், நாம் அன்றாடம் உரையாடல் நடத்தும் WhatsApp ல் தமிழை தமிழ் எழுத்துகளில் எழுதுகிறோமா? ஆங்கில எழுத்துகளில் எழுதுகிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும் செயற்கை அறிவாற்றின் அபரிமிதமான வளர்ச்சியினால் நாளை நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு மொழி தெரிந்தால் போதுமானதாக இருக்கும். அதை விரும்பிய மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்து கொள்ளலாம்.
அறிவியல் இப்படி முன்னேறி வருகிற நேரத்தில் 5-6 மொழி தெரிய வேண்டும் என்பது அனைவருக்கும் தேவையற்ற சுமையே!
கண்டிப்பாக காண வேண்டிய காணொளியை இணைத்துள்ளேன். பாருங்கள்.
தமிழ் மொழி என்பது நம் உரிமை.
தமிழ் மொழி நம் உணர்வு.
தமிழ் மொழி நம் உயிர்.
நம் உரிமைகளுக்கான போராட்டத்தில் நமக்கான வாளையும் கேடயமும் நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தாய்த் தமிழ் என்னும் கூர்வாளும் ஆங்கிலம் என்னும் கேடயமும் நம்மிடம் இல்லையெனில் இந்தி என்னும் அரக்கியை வீழ்த்த முடியாது.
ஆக தாய்மொழி நலன் காக்க, ஆதிக்க மொழியை எதிர்க்க பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
விக்னேஸ்வரன் மு
நன்றி
முகநூல் நண்பர்கள்
நியூஸ் 18 தொலைக்காட்சி
அண்ணன்கள் சிங்கங்கள்

Comments

Popular posts from this blog

அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்

தமிழாற்றுப்"படை"

எதிர்நீச்சல் அடி!